அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மாணவியை மிரட்டிய முன்னாள் காதலன் கைது
அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மாணவியை மிரட்டிய முன்னாள் காதலன் கைது
ADDED : ஜன 18, 2024 05:02 AM
மாதநாயக்கனஹள்ளி,: அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக, கல்லுாரி மாணவியை மிரட்டிய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் விஜய் டேனியல், 24. கடந்த 2014ம் ஆண்டு லக்கரேயில் உள்ள, அரசு பள்ளியில் படித்தார். தன்னுடன் படித்த மாணவியை காதலித்தார். இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசி கொண்டனர்.
காதலியை நிர்வாணமாக, வீடியோ காலில் பேசும்படி, விஜய் கேட்டுள்ளார். முதலில் காதலி மறுத்தார். எந்த பிரச்னையும் வராது என்று, விஜய் கூறியதால், நிர்வாணமாக வீடியோ காலில் பேசி உள்ளார்.
இதை விஜய் வீடியோ எடுத்துக் கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விஜயும், அவரது காதலியும் பிரிந்தனர். அதன் பின்னர் இருவருக்கும் இடையில், எந்த தொடர்பும் இல்லை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, முன்னாள் காதலியிடம், மொபைல் போனில் பேசிய விஜய், “என்னுடன் மீண்டும் தொடர்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உனது ஆபாச வீடியோவை வெளியிடுவேன்,” என, மிரட்டினார்.
இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசில் விஜய் மீது, முன்னாள் காதலி புகார் அளித்தார். அதன்பேரில் விஜயை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.