பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு கொலை மிரட்டல் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கைது
பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு கொலை மிரட்டல் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கைது
ADDED : பிப் 15, 2024 04:52 AM

பெங்களூரு : பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபாலய்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த, பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு மஹாலட்சுமி லே - அவுட் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபாலய்யா. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, காங்கிரஸ் பிரமுகரும், பசவேஸ்வராநகர் வார்டு முன்னாள் கவுன்சிலருமான பத்மராஜ், கோபாலய்யாவிடம் மொபைல் போனில் பேசினார். அப்போது கோபாலய்யாவை ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார்.
இதையடுத்து பத்மராஜ் மீது காமாட்சிபாளையா போலீசில், கோபாலய்யா புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், பத்மராஜை நேற்று மதியம் கைது செய்தனர். முன்னதாக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து, சபாநாயகர் காதரை நேரில் சந்தித்து, கோபாலய்யா புகார் அளித்தார். உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடமும் புகார் செய்தார்.
இதற்கு முன்பு விதான் சவுதா வளாகத்தில், கோபாலய்யா அளித்த பேட்டி:
எனக்கு கொலை மிரட்டல் விடுத்த பத்மராஜ், பா.ஜ.,வில் இருந்தவர். என்னிடம் இருந்து நிறைய உதவிகள் பெற்று உள்ளார். ஆனால் இப்போது என்னையே மிரட்டுகிறார். என்னை மட்டும் இல்லை, இன்னும் சில எம்.எல்.ஏ.,க்களை மிரட்டி உள்ளார். இதுகுறித்து சட்டசபையில் பத்மராஜால் மிரட்டப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பேசுவர்.
பத்மராஜின் மகள் என்னை சந்தித்து, அப்பா குடிபோதையில் தெரியாமல் பேசிவிட்டார். அவரை மன்னித்து விடுங்கள் என்று, என்னிடம் கேட்டு கொண்டார். நான் புகார் அளித்து விட்டேன் என்று, அவரிடம் கூறினேன். பத்மராஜிடம் விசாரணை நடத்தி, என்னை மிரட்டியதற்கு காரணத்தை போலீசார் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
இதற்கிடையில் கைதான பத்மராஜை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
பின், பத்மராஜ் அளித்த பேட்டி:
எம்.எல்.ஏ., கோபாலய்யாவிடம், ஒரு வேலைக்காக 15 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால், அந்த வேலை நடக்கவில்லை. இதனால் அவரிடம் போன் செய்து, பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். அவருக்கு நான் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. என் மீது பொய் புகார் அளித்தார். நான் 2010ல் பா.ஜ., கவுன்சிலராக இருந்தேன்.
இப்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள அசோக், அப்போது என்னிடம் ஒரு கோடி ரூபாய் வாங்கினார். மேயர் பதவி வாங்கி தருவதாக உறுதி அளித்தார். ஆனால் மேயர் பதவி கிடைக்கவில்லை. பணத்தையும் திரும்பி தரவில்லை. கடந்த ஆண்டு நான் காங்கிரசில் இணைந்தேன். அதன்பின்னர் தான் அசோக்கிடம் இருந்து, ஒரு கோடி ரூபாயை வாங்க முடிந்தது.
இவ்வாறு அவர்கூறினார்.

