மஹா., மாஜி முதல்வர் திடீர் ராஜினாமா: காங்கிரசுக்கு இன்னொரு அடி
மஹா., மாஜி முதல்வர் திடீர் ராஜினாமா: காங்கிரசுக்கு இன்னொரு அடி
ADDED : பிப் 12, 2024 01:03 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், தற்போதைய எம்எல்ஏ.,வுமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் அம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் விலகிய நிலையில், அசோக் சவானின் விலகல், அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். குறிப்பாக மஹாராஷ்டிராவில் காங்., தலைவர்கள் வரிசையாக ராஜினாமா செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். அதேபோல், சில நாட்களுக்கு முன்னதாக மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சராக பதவி வகித்த பாபா சித்திக் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இப்படி அடுத்தடுத்து காங்., தலைவர்கள் வெளியேறுவதால் காலியாகிவரும் காங்., கூடாரத்தில் அடுத்ததாக முன்னாள் முதல்வர் அசோக் சவானும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் காங்., அதிர்ச்சியடைந்துள்ளது. தற்போது காங்., எம்எல்ஏ.,வாகவும், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ள அசோக் சவான், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிராவில் முக்கிய தலைவர்கள் வரிசையாக விலகுவது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்.பி., ராகுலின் தோல்வியாக பார்க்கப்படுகிறது. கட்சியை வளர்க்கும் நோக்கில் பாதயாத்திரை செல்லும் ராகுலுக்கு போதிய ஆதரவு இல்லாததால், கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக தலைவர்கள் உணர்வதால் விலக முடிவு செய்வதாகவும் கூறப்படுகிறது.

