ADDED : பிப் 26, 2024 07:06 AM

கொப்பால்: சட்டசபை தேர்தலில் நான் தோற்று போனதற்கு, சொந்த கட்சியினரே காரணம் என்று, முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
கொப்பால் மாவட்டம், கங்காவதி தொகுதியில், ம.ஜ.த., சார்பில் போட்டியிட்டு 2004, 2018ல் எம்.எல்.ஏ.,வானவர் இக்பால் அன்சாரி. அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். ம.ஜ.த, தலைமை மீதான அதிருப்தியால், காங்கிரசில் இணைந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில் கங்காவதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். முன்னதாக அவருக்கு 'சீட்' கொடுக்க, காங்கிரசில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் தன் ஆதரவாளர் ஒருவரிடம், இக்பால் அன்சாரி மொபைல் போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. 'நான் என்ன தவறு செய்தேன் என்றே தெரியவில்லை. இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து, கங்காவதி தொகுதி வளர்ச்சிக்காக பணியாற்றி உள்ளேன்.
'ஆனாலும் கடந்த தேர்தலில் தோற்று போனேன். எனது தோல்விக்கு கங்காவதியை சேர்ந்த, சில காங்கிரஸ் தலைவர்கள் தான் காரணம். என்ன நடக்கிறது என்று, எனது சமூக மக்கள் நன்கு அறிவர்' என்று பேசி உள்ளார்.
லோக்சபா தேர்தல் நேரத்தில் இந்த ஆடியோ வெளியாகி, காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

