ராகுலை புகழ்ந்த பாக்., முன்னாள் அமைச்சர்: காங்.,கிற்கு பா.ஜ., கடும் கண்டனம்
ராகுலை புகழ்ந்த பாக்., முன்னாள் அமைச்சர்: காங்.,கிற்கு பா.ஜ., கடும் கண்டனம்
ADDED : மே 02, 2024 12:31 PM

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுலை புகழும் வகையில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பாவத் சவுத்ரி ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, அக்கட்சிக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் பாவத் சவுத்ரி.இவர் , எக்ஸ் சமூக வலைதளத்தில் ராகுல் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதனுடன், ‛கடும் தாக்குதலை கையில் எடுத்த ராகுல் ' எனக்கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.,வின் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இம்ரான் கான் அரசில் அமைச்சராக இருந்த பாவத் சவுத்ரி, ராகுலை முன்னிலைப்படுத்துகிறார். பாகிஸ்தானில் போட்டியிட காங்கிரஸ் திட்டமிடுகிறதாமுஸ்லிம் லீக் கட்சியை பிரதிபலிக்கும் தேர்தல் அறிக்கை முதல் எல்லைக்கு அப்பாலில் இருந்து ஒலிக்கும் ஆதரவு வரை அக்கட்சி, பாகிஸ்தானுடன் உள்ள உறவை வெளிப்படையாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பாரதத்திற்கு எதிராக விஷத்தை கக்கியவர், ராகுலை முன்னிலைப்படுத்துகிறார். காங்கிரஸ் தான் தங்களது ஆதரவான கட்சி என பயங்கரவாதி ஹபீஸ் சயீத் முன்பு கூறியிருந்தார். பிரதமர் மோடி குறித்து அவதூறு செய்ய மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் சென்றார். காங்கிரஸ் தலைவர் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினர். அக்கட்சியின் ஹரிபிரசாத் பாகிஸ்தானுக்காக பேசினார். மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளை காங்கிரஸ் தலைவர்கள் ஆதரிக்கின்றனர் எனக்கூறியுள்ளார்.

