போலி 'என்கவுன்டர்' வழக்கில் சிக்கிய முன்னாள் மாடல் அழகி சுட்டுக்கொலை
போலி 'என்கவுன்டர்' வழக்கில் சிக்கிய முன்னாள் மாடல் அழகி சுட்டுக்கொலை
ADDED : ஜன 05, 2024 01:10 AM

குருகிராம், போலி 'என்கவுன்டர்' வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்த, முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா, 27, ஹரியானா ஹோட்டல் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் குருகிராமில் வசித்து வந்த பிரபல தாதா சந்தீப் கடோலி, கடந்த 2016ல் மஹாராஷ்டிராவின் மும்பையில் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கைது
அவரது காதலியும், மாடல் அழகியுமான திவ்யா பஹுஜாவின் உதவியால் இந்த போலி என்கவுன்டர் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இதில் தொடர்புடைய போலீசார் கைது செய்யப்பட்டனர். மாடல் அழகி திவ்யாவும் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி முதல் அவரை காணவில்லை என திவ்யா குடும்பத்தினர், குருகிராம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில், குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திவ்யா நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
சிறையில் இருந்து வந்த திவ்யாவுக்கு ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவருடன் நெருக்கமாக இருந்த நிலையில், அந்த புகைப்படங்களை காட்டி பணம் கேட்டு, திவ்யா மிரட்டியுள்ளார். இது தொடர்பாக நடந்த மோதலில், திவ்யாவை அபிஜித் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
அவரது உடலை ஹோட்டல் ஊழியர்கள் ஹேம்ராஜ், ஓம்பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றார்.
குற்றச்சாட்டு
அப்போது போலீசில் அவர்கள் சிக்கியதை அடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை திவ்யா குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்த ரவுடி சந்தீப்பின் சகோதரன் பிராம் பிரகாஷ், சகோதரி சுதேஷ் ஆகியோரின் உத்தரவின் அடிப்படையில், கூலிப்படையாக செயல்பட்ட அபிஜித், திவ்யாவை சுட்டுக் கொன்றதாக அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.