ADDED : பிப் 05, 2024 11:50 PM

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடப்பதாகவும், இதில் மகேந்திர சிங் தோனிக்கு தொடர்பு இருப்பதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத் குமார் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக அவருக்கு எதிராக, 100 கோடி ரூபாய் கேட்டு அவதுாறு வழக்கை தோனி தொடர்ந்தார். இந்நிலையில், இவ்விவகாரத்தில் நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையில், சம்பத் குமார் அறிக்கை வெளியிட்டது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக, சம்பத் குமாருக்கு, 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து கடந்தாண்டு டிசம்பரில் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து சம்பத் குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.