நக்சல் வழக்கில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பேராசிரியர் சாய்பாபா மரணம்
நக்சல் வழக்கில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பேராசிரியர் சாய்பாபா மரணம்
ADDED : அக் 14, 2024 03:08 AM

ஹைதராபாத்: நக்சல்களுடன் தொடர்புடைய வழக்கில் கைதாகி, 10 ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்ட டில்லி பல்கலை முன்னாள் பேராசிரியர் சாய்பாபா, 57, உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.
டில்லி பல்கலை ராம் லால் ஆனந்த் கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றியவர் சாய்பாபா. மாற்றுத்திறனாளியான இவர், பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
மத்திய சிறை
இந்நிலையில், கடந்த 2014ல் நக்சல் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறி, உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், மும்பை போலீசார் சாய்பாபாவை கைது செய்து, நாக்பூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து சாய்பாபாவை, அக்கல்லுாரி நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியது.
கடந்த 2017ல் இவ்வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. எனினும், இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சாய்பாபா மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான சாட்சியங்களும் இல்லை எனக்கூறி, கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். 10 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் விடுதலையான சாய்பாபாவிற்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சிகிச்சை
சமீபத்தில் பித்தப்பையில் ஏற்பட்ட தொற்றால் அவதியுற்ற அவர், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், சாய்பாபாவிற்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே, அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்; எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.