பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தாமதமாக வாய்ப்பு; காரணம் இதுதான்!
பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தாமதமாக வாய்ப்பு; காரணம் இதுதான்!
ADDED : பிப் 16, 2025 06:59 AM

புதுடில்லி: மனிதாபிமான அடிப்படையில், பயங்கரவாதி ராணா நாடு கடத்தலுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளான். இதனால் அவனை நாடு கடத்துவது சில வாரங்கள் தாமதம் ஏற்படும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் - இ - தொய்பா அமைப்புக்கு உதவியதாக பாக்., வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. கடந்த 2013ல் ராணாவுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் நம் நாட்டு அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று, நாடு கடத்த நீதிமன்றம் 2023ல் உத்தரவு பிறப்பித்தது. நாடு கடத்தலுக்கு தடை கோரி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ராணா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தான். இந்த மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கியது.
ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சூழலில், ராணாவை நாடு கடத்த, இந்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில், நாடு கடத்தலுக்கு எதிராக பயங்கரவாதி ராணா மேல்முறையீடு செய்துள்ளான். இந்த மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.
இதனால் அவனை நாடு கடத்த சில வாரங்கள் கால தாமதம் ஏற்படும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில், ராணாவின் மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடும். இதனால் ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வியில் தான் முடியும் என இந்தியாவை சட்ட வல்லுநர்கள் கூறி உள்ளனர்.