கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்: பா.ஜ., காங்.,க்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு
கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்: பா.ஜ., காங்.,க்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு
ADDED : மே 22, 2024 03:39 PM

புதுடில்லி: தங்களது கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்து, கூடுதல் கவனம் செலுத்துவதுடன், நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தும்படி, பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
மதம், மொழி, ஜாதி ரீதியாக பிரசாரம் செய்வதாக பா.ஜ.,வும் காங்கிரசும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், பாஜ., தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது: இரு கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களும் கட்டுப்பாட்டை கடைபிடித்து, கூடுதல் கவனத்துடன் நாகரீகமாக பேச வேண்டும். மதம் மற்றும் ஜாதி ரீதியாக பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பிரசாரம் செய்வதை பா.ஜ., நிறுத்த வேண்டும்.
அரசியலமைப்பு நீக்கப்படும் என தவறாக பொருள்படும்படி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி நட்சத்திர பேச்சாளர்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்த வேண்டும். பாதுகாப்பு படை விவகாரங்களை அரசியலாக்கக்கூடாது.
பாதுகாப்பு படையினரின் சமூக பொருளாதார கூட்டமைப்பு தொடர்பாக பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது என காங்கிரஸ் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

