கருத்துக்கணிப்பை நம்பாதே; இந்த தேர்தல் சொல்லும் பாடம் இதுதான்!
கருத்துக்கணிப்பை நம்பாதே; இந்த தேர்தல் சொல்லும் பாடம் இதுதான்!
ADDED : அக் 08, 2024 11:45 AM

புதுடில்லி; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தரைமட்டமாக்கி இருக்கிறது ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. இந்த முடிவுகளை அறிய அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாமல் நாட்டு மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் வழக்கம் போல், மக்கள் ஆதரவு யாருக்கு என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இந்த கணிப்புகளில் எல்லாம் ஹரியானா தேர்தல் முடிவுகள் பற்றியே பெரும்பாலும் பேசப்பட்டு இருந்தன. 2 முறை அரியணையில் இருந்த பா.ஜ., இம்முறை ஆட்சியை இழக்கும். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியுடன் அரியணை ஏறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தன.
ஒன்றல்ல, இரண்டல்ல...! கிட்டத்தட்ட பிரபல நிறுவனங்கள், தேர்தல் கணிப்பு சூத்திரங்களை அலசி ஆராய்ந்து மக்கள் மத்தியில் புள்ளி விவரங்களுடன் அள்ளி வீசும் அமைப்புகள் இந்த கருத்துக் கணிப்புகளை நடத்தின. மொத்தம் 8 கருத்துக்கணிப்புகள் வெளியானது.
அனைத்திலும், ஹரியானாவில் பெரும்பான்மைக்கு தேவையான 46 தொகுதிகளை கடந்து, காங்கிரஸ் கட்சி அரியணை ஏறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆட்சியை தக்க வைக்க முடியாமல் பா.ஜ., 18 முதல் 29 தொகுதிகள் வரையே பெறும். இப்படித்தான் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட்டு இருந்தன.
கருத்துக்கணிப்பு முடிவுகளை கண்ட காங்கிரஸ் கொண்டாட, பா.ஜ., நம்பிக்கையுடன் காத்திருந்தது. மக்கள் மீதான பா.ஜ., நம்பிக்கை வீண் போகாமல் இருந்திருக்கிறது. ஹரியானா ஓட்டு எண்ணிக்கை தொடக்கத்தில் பின்னடைவில் இருந்த பா.ஜ., பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை கடந்து அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
8 நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை மக்கள் அடித்து, நொறுக்கி பா.ஜ., அரியணை ஏற ஹாட்ரிக் வாய்ப்பு அளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஹரியானா தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் பொய்யாகி இருக்கின்றன.
கருத்துக்கணிப்புகளில் மக்களின் கருத்துகள், அவர்களின் மனோநிலை, எந்த தொகுதிகளில் எந்த வயது உள்ளோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன, அவர்களின் எதிர்பார்ப்பு என பல காரணிகளை முன் வைத்து, விஞ்ஞான ரீதியாக கணக்கிடப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதாக அதை வெளியிடும் நிறுவனங்கள் கூறி வருகின்றன.
கருத்துக்கணிப்புகள் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பொய்யானது. ஆளும் பா.ஜ., 400க்கும் அதிகமாக தொகுதிகளை கைப்பற்றும், காங்கிரசை மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் 400 தொகுதிகளை எட்ட முடியாமல் பா.ஜ., கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தாலும், அப்போதைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மாறியே இருந்தது.
என்னதான் கணிப்புகள் களத்தில் இருந்தாலும் மக்கள் மனதில் நினைத்ததை மாற்ற முடியாது என்பது தான் ஹரியானா தேர்தல் கருத்துக்கணிப்புகள் இம்முறை சொல்லும் பாடம்!

