ADDED : அக் 18, 2024 07:54 PM

புதுடில்லி:யமுனை நதியில் மாசு அதிகரித்து அடர்த்தியான வெள்ளை நுரை தேங்கியுள்ளது. இது நதியில் குளிக்கும் மக்களுக்கு உடல்நல கேடு ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றான யமுனை, தலைநகர் டில்லியை கடந்து செல்கிறது. டில்லிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. யமுனை நதியில் கழிவு நீர் கலப்பதால், சில நாட்களா வெள்ளைநுரை படர்ந்துள்து. இந்தக் காட்சிகளை சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். அது வேகமாக பரவி வருகிறது.
மேகக் கூட்டங்களைப் போல யமுனை நதியின் மேற்பகுதியில் வெள்ளை நுரை படர்ந்து இருப்பது டில்லிவாசிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து, 'தெற்காசிய அணைகள், நதிகள் மற்றும் மக்கள் நெட்வொர்க்' அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பீம்சிங் ராவத் PTI இடம் கூறியதாவது:
நதியின் மேற்பகுதி குறிப்பிடத்தக்க அளவுக்கு வெள்ளப்பெருக்கை சந்திக்கிறது. ஆனால் இந்த ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை இல்லை. இது வழக்கத்திற்கு மாறானது. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
அதில் நதியில் கலந்துள்ள மாசுக்கள் அடித்துச் செல்லப்பட்டு விடும். இந்த ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்படாததால் மாசுக்கள் திரண்டு வெள்ளைநுரையாக மேற்பகுதியில் படிந்துள்ளது.
இது, நதி நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். நதியில் இயற்கையாகவே சில சுத்திகரிப்பு இருந்தாலும், மாசு அளவு அதிகமாக இருப்பதால்தால் மேற்பரப்பில் நுரை படிந்துள்ளது.
சத்பூஜை, தீபாவளி உள்ளிட்ட முக்கியப் பண்டிகை காலத்தில் நதியில் ஏராளமானோர் நீராடுவர். இந்த நுரையில் அதிகளவு அமோனியா மற்றும் பாஸ்பேட்டுகள் இருக்கும். இது, சுவாசம் மற்றும் தோல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
எனவே, யமுனை நதியை சுத்தம் செய்து மாசு அளவைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.