ADDED : நவ 11, 2024 04:52 AM
ஹைதராபாத்; தெலுங்கானாவில் உள்ள ஹோட்டலில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டதில், அருகே இருந்த ஆறு குடிசைகள் சேதமாகின; இரண்டு பேர் காயமடைந்தனர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதின் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில்,தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலின் பின்புற சுவரை ஒட்டியுள்ள பகுதியில், நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்தது.
அப்போது, ஹோட்டலின் சுவரில் இருந்த கற்கள் அருகில் இருந்த குடிசைகள் மீது விழுந்ததில், ஆறு குடிசைகள் சேதமாகின.
இதுதவிர, அப்பகுதியில் வசித்த இரண்டு பேர் காயமடைந்தனர். போலீசார், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினருடன், பேரிடர் மீட்புக் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஹோட்டலின் சமையற்கூடத்தில் சிலிண்டரிலிருந்து காஸ் கசிந்த நிலையில், அதன் அருகே வைக்கப்பட்டிருந்த 'பிரிஜ்ஜின் கம்ப்ரசர்' திடீரென வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததை கண்டறிந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.