போலீஸ் ஸ்டேஷனில் வெடிவிபத்து? பஞ்சாப் போலீஸ் மறுப்பு
போலீஸ் ஸ்டேஷனில் வெடிவிபத்து? பஞ்சாப் போலீஸ் மறுப்பு
ADDED : டிச 17, 2024 10:08 PM

அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் போலீஸ் ஸ்டேஷனில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததாக நேற்று தகவல் பரவியது. ஆனால், போலீசார் இதை மறுத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அமைந்துள்ள இஸ்லாமாபாத் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு வெடிகுண்டு வெடித்தது போல பயங்கர சத்தம் ஏற்பட்டது.
ஸ்டேஷன் அருகே வசித்த மக்கள் கடும் அதிர்ச்சியுடன் ஸ்டேஷன் அருகே திரண்டனர். ஆனால், போலீஸ் அதிகாரிகளோ வெடிகுண்டு எதுவும் வெடிக்கவில்லை என்றனர். ஆனால், சமூக வலைதளங்களில், இஸ்லாமாபாத் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியது.
இச்சம்பவம் குறித்து அமிர்தசரஸ் மாநகர போலீஸ் கமிஷனர் குர்ப்ரீத் சிங் புல்லார் கூறுகையில், “போலீஸ் ஸ்டேஷன் வளாகம் அருகே அதிகாலை 3:15 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டது உண்மை. ஆனால், அது வெடிவிபத்து இல்லை. ஸ்டேஷன் அருகேயுள்ள சோதனைச் சாவடி மீது பெரிய இரும்புத் தகடு விழுந்ததால் பயங்கர சத்தம் ஏற்பட்டது.
சம்பவம் இடத்தை போலீஸ் உயரதிகாரிகள் பார்வையிட்டனர். சமூக வலைதளத்தில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்,” என்றார்.