அசாமில் குடியரசு தின நிகழ்ச்சியில் வெடி சத்தம் 'உல்பா' பொறுப்பேற்பு
அசாமில் குடியரசு தின நிகழ்ச்சியில் வெடி சத்தம் 'உல்பா' பொறுப்பேற்பு
ADDED : ஜன 26, 2025 11:34 PM

குவஹாத்தி: அசாமின், குவஹாத்தியில் குடியரசு தின நிகழ்ச்சியின் போது இரண்டு இடங்களில் மர்ம பொருள் வெடித்த சத்தம் கேட்ட நிலையில், 'மக்களை எச்சரிக்க நாங்கள் தான் குண்டு வைத்தோம்' என, 'உல்பா' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, தடை செய்யப்பட்ட உல்பா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் உள்ளது. அந்த அமைப்பினர் சமீபத்தில், 'குவஹாத்தியில் பொது மக்கள் யாரும் குடியரசு தின நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது' என, மிரட்டல் விடுத்திருந்தனர்.
பதற்றம்
இதனால் குவஹாத்தியில் கடந்த சில நாட்களாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று குவஹாத்தியில் உள்ள கலெக்டர் அலுவலகம், பள்ளி, கல்லுாரிகள், சந்தை ஆகிய இடங்களில் குடியரசு தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டன.
காலை 7:45 மணியளவில் பிரம்மபுத்திரா பஜார் பகுதியில், மர்ம பொருள் வெடித்தது போல் பலத்த சத்தம் கேட்டது.
அங்கிருந்தவர்கள் அலறியபடி வெளியே ஓடினர். ரேஹாபரி என்ற பகுதியிலும் இதே போல் பலத்த சத்தம் கேட்டதாக, அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறினர்.
ஆனால், போலீசார் முதலில் இவற்றை வதந்தி என மறுத்தனர்.
இதற்கிடையே, பெட்குச்சி என்ற வெளிமாநில பேருந்து நிலைய பகுதியில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது, மக்களிடையே பதற்றத்தை அதிகரித்தது.
போலீசார் பையை கைப்பற்றி திறந்து பார்த்த போது, அதில் துணி மற்றும் அடையாள அட்டை மட்டுமே இருந்தது; பயப்படும் படியான விஷயங்கள் ஏதுமில்லை. அதை தவறவிட்ட நபரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்திய பின் போலீசார் பையை ஒப்படைத்தனர்.
பறிமுதல்
இந்நிலையில், வெடி சத்தம் கேட்ட சில மணி நேரங்களுக்கு பின், தடை செய்யப்பட்ட உல்பா அமைப்பின் சார்பில் ஊடக நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் வந்தது.
அதில், 'குவஹாத்தியில் இரண்டு இடங்களில் நாங்கள் தான் வெடிகுண்டு வைத்தோம். இனி சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நிகழ்ச்சிகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்ற செய்தியை சொல்வதற்காக, யாருக்கும் சேதம் ஏற்படாத வகையில் அவற்றை வெடிக்கச் செய்தோம்' என கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து போலீசார் நடத்திய சோதனையில், குவஹாத்தியில் நான்கு இடங்களில் இருந்து வெடிகுண்டு போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

