ADDED : ஜன 29, 2025 01:40 AM

புவனேஸ்வர்ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு, முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 'செழிப்பான ஒடிசா - ஒடிசாவில் உற்பத்தி செய்வோம்' என்ற இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மக்களின் எதிர்பார்ப்புகளே, நாட்டின் வளர்ச்சியை இயக்குகிறது. தாங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்போது, மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது. இவற்றை நிறைவேற்றுவதன் வாயிலாக, நாட்டின் வளர்ச்சியும் வேகமாக உள்ளது.
தற்போது உலகெங்கும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மிகவும் பிரபலமாகி வருகிறது. அதுபோல, மற்றொரு ஏ.ஐ., அதாவது 'ஆஸ்பிரேஷன் இந்தியா' எனப்படும், இந்திய மக்களின் எதிர்பார்ப்பு, நம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
நாட்டின் வளர்ச்சியின் வாயிலாக, கிழக்கு மாநிலங்களை நான் பார்க்கிறேன். அதில், ஒடிசாவுக்கு பெரும் பங்கு உள்ளது. இங்குள்ள வளங்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள், இதை சாத்தியமாக்கும்.
இங்குள்ள வளங்களை, அதாவது மூலப் பொருட்களை வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்து, அதில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதை என்னால் ஏற்க முடியாது. இங்கேயே அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

