சென்னைக்கு அதிவிரைவு சாலை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு 'ஜாக்பாட்'
சென்னைக்கு அதிவிரைவு சாலை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு 'ஜாக்பாட்'
ADDED : பிப் 17, 2024 05:20 AM
பெங்களூரு : சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலையால், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு 'ஜாக்பாட்' அடிக்க உள்ளது.
தமிழக தலைநகரான சென்னையும், கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவும், இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகின்றன. இரு நகரங்களுக்கு இடையே பயண நேரம் குறைந்தது ஆறு மணி நேரமாக உள்ளது.
ரயிலில் சென்றால் ஐந்து முதல் ஆறு மணி நேரத்தில் சென்றுவிடலாம். ஆனால் பஸ்சில் செல்லும்போது ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் ஆகிவிடுகிறது.
இதனால், இரு நகரங்களையும் விரைவில் இணைக்கும் வகையில், பெங்களூரு - சென்னை இடையில் 258 கிலோ மீட்டர் துாரத்திற்கு, அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட்டில் இருந்து, தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வரை இந்த சாலை அமைகிறது.
கர்நாடகாவின் ஹொஸ்கோட், மாலுார், பங்கார்பேட், பேத்தமங்களா, ஆந்திராவின் வெங்கடகிரிகோட்டா, பலமநேர், பங்காருபலேம், சித்துார், தமிழகத்தின் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, அரக்கோணம் வழியாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
சாலை அமைக்கும் பணி மூன்று கட்டங்களாக நடக்கின்றன. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு அதிவிரைவு சாலை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என, மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.
கர்நாடகாவில் 87 சதவீதம், தமிழகத்தில் 55 சதவீதம், ஆந்திராவில் 40 சதவீதம் பணிகள் முடிந்து உள்ளன. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால், ஹொஸ்கோட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதுாருக்கு இரண்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
இதன்மூலம் வாகனங்களின் எரிபொருள் சிக்கனம் ஆகும். இரு நகரங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்தும் விரைவாக நடக்கும். ஏற்றுமதி, இறக்குமதிக்கு அதிக நன்மை தரும்.
அதிவிரைவு சாலை செல்லும் வழியில், ரியல் எஸ்டேட் தொழிலும் ரியல் எஸ்டேட் தொழிலும் கொடிகட்டி பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதனால் அங்கு நிலம் வாங்கும், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு பெரிய 'ஜாக்பாட்' காத்திருக்கிறது.