நாகாலாந்து, அருணாச்சலில் ஆயுதப்படை அதிகார சட்டம் 6 மாதம் நீட்டிப்பு
நாகாலாந்து, அருணாச்சலில் ஆயுதப்படை அதிகார சட்டம் 6 மாதம் நீட்டிப்பு
ADDED : செப் 27, 2024 04:47 AM

புதுடில்லி: நாகாலாந்தில் எட்டு மாவட்டங்களிலும், அருணாச்சல பிரதேசத்தில் மூன்று மாவட்டங்களிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டங்கள், அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு பாதுகாப்பு படையினரால் கட்டுப்படுத்த முடியாத சூழலில், அங்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
தேடுதல் வேட்டை நடத்துவது, கைது செய்வது, தேவையான சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற அதிகாரங்கள், இந்த சட்டம் வாயிலாக பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுகின்றன.
இதன்படி, சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தனித்தனியாக ஆணை வெளியிட்டுள்ளது. அதில், நாகாலாந்தில் உள்ள திமாபூர், நியுலாண்ட், சுமோகெடிமா, மோன், கிபிர், நோக்லாக், பெக் மற்றும் பெரன் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஏற்கனவே அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டங்கள், வரும் 1ம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கோஹிமா, மோகோக்சங், லாங்லெங், வோக்கா, ஜூன்ஹெபோட்டோ ஆகிய மாவட்டங்களில், 21 போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இந்த சட்டங்கள் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
அருணாச்சலில் உள்ள திரப், சாங்லாங், லாங்டிங் மாவட்டங்களிலும், நம்சாய் மாவட்டத்தில், அசாம் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள நம்சாய், மஹாதேவ்பூர், சவுகாம் போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டங்கள் வரும் 1ம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.