வரும் 26ல் சர்வதேச போதை ஒழிப்பு நாள் டில்லியில் விரிவான பிரசார ஏற்பாடுகள்
வரும் 26ல் சர்வதேச போதை ஒழிப்பு நாள் டில்லியில் விரிவான பிரசார ஏற்பாடுகள்
ADDED : ஜூன் 19, 2025 07:07 PM
புதுடில்லி,:''வரும், 26ம் தேதி நடக்கவிருக்கும், சர்வதேச போதை ஒழிப்பு நாள் மற்றும் சட்ட விரோத ஆள் கடத்தலுக்கு எதிரான நாளின் போது, பொதுமக்களை சென்றடையும் பல திட்டங்களை டில்லி மாநில அரசு அமல்படுத்த உள்ளது,'' என, டில்லி மாநில அரசின் சமூக நலன் துறை அமைச்சர் ரவீந்தர் இந்தர்சிங் கூறினார்.
இதுதொடர்பாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
டில்லி மாநில அரசின் சமூக நலத்துறை, போலீஸ் மற்றும் கல்வித்துறை இணைந்து, அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில், புதிய பிரசார இயக்கம் நடத்தப்பட உள்ளது. வரும், 26ம் தேதி நடக்கவிருக்கும் சர்வதேச போதை ஒழிப்பு நாள் மற்றும் சட்ட விரோதமாக ஆட்கள் கடத்துவதற்கு எதிரான நாளில், மாநிலத்தின், 64 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்களில் தெருக்கூத்துகள் நடத்தப்பட உள்ளன.
இதற்காக அனைத்து துறையின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வாயிலாக, டில்லியில் போதையை ஒழித்து, ஆரோக்கியமான, அதிகாரம் மிக்க டில்லி நகரை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
பள்ளிகள் அளவில் போஸ்டர்கள் ஒட்டுதல், கருத்தாழமிக்க சொற்பொழிவுகள் போன்ற வழிமுறைகள் பின்பற்றப்படும். போதைப்பொருள் பயன்பாடால் ஒரு தனிநபர் மட்டும் அழிவதில்லை; உடல் ரீதியாக, மன ரீதியாக, நிதி ரீதியாக ஒரு குடும்பமே அழிகிறது.
எனவே, வானொலி நிகழ்ச்சிகள், சினிமா படங்கள் காட்டுதல், ஆடியோ - விசுவல் போன்றவை வாயிலாக பொது இடங்களில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி., மாணவர்கள் வாயிலாக, இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும். இது, வெறும் பிரசார இயக்கமாக இன்றி, சமூக இயக்கமாக மாற்றப்படும்.
எங்களின் இந்த பிரசாரத்தில் மாணவர்கள், இந்த சமுதாய பிரதிநிதிகள், பல அமைப்புகளின் தொண்டர்கள் தாங்களாகவே இணைந்து செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.