ADDED : நவ 05, 2025 02:20 AM
காற்று மாசு அதிகரித்து வருவது குறையாததால் முதியோர் இல்லங்கள், பள்ளிகளில் கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வசந்த்குஞ்ச் பகுதியில் செயல்படும், செகண்ட் இன்னிங்ஸ் எனும் முதியோர் ஓய்வு மையத்தின் உரிமையாளர் ஹர்ஷ்குமார்: முதியோர் பலருக்கு சி.ஓ.பி.டி., எனும் க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசீஸ் எனும் நோய் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
அதனால், எங்களின் முதியோர் இல்லங்களில் ஏர் பியூரிபையர்களை அதிகமாக பொருத்தியுள்ளோம். முதியோர் வெளியே செல்ல வேண்டியிருந்தால், முககவசம் அணிய அவர்களை வலியுறுத்து கிறோம்.
அநேகமாக, இந்த சீசன் முழுக்க அவர்கள் வீடுகளின் உள்ளே தான் இருக்கின்றனர்.
பதார்பூரில் செயல்படும் குரு விஸ்ராம் விருத் ஆஸ்ரமத்தில் பணியாற்றும் குருபிரீத்: எங்கள் இல்லத்தில் வாழும் அனைவருக்கும் முககவசங்களை வழங்கியுள்ளோம். கூடுதல் ஏர் பியூரிபையர் இயந்திரங்களை பொருத்தி உள்ளோம்.
எல்லாரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். வெளிப்புற செயல்பாடுகளை முழுவதும் நிறுத்தியுள்ளோம். அப்படி கட்டாயம் வெளியே போக வேண்டும் என வந்தால், 10 - 15 நிமிடங்கள் முக கவசத்துடன் செல்ல அறிவுறுத்தியுள்ளோம்.
கிழக்கு கைலாஷ் பகுதியில் செயல்படும் தாகூர் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் மல்லிகா பிரேமன்: காற்று மாசு அதிகரித்துள்ளதால், வெளிப்புற நடவடிக்கைகள் பலவற்றை நிறுத்தி விட்டோம்.
விளையாட்டு போட்டிகளை கூட, அரங்கிற்குள் தான் நடத்துகிறோம். என் 95 ரக முக கவசங்களை அனைவரும் அணிய வற்புறுத்தியுள்ளோம்.
இவ்வாறு பல பள்ளிகளின் முதல்வர்கள் கூறினர்.

