ADDED : ஜன 11, 2026 12:28 AM

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கு ஆண்டுதோறும் யு.பி.எஸ்.சி., தேர்வு நடத்தி வருகிறது. தேர்வுகளில் முறைகேடை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தேர்வர்களுக்கு முக அடையாள சோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, யு.பி.எஸ்.சி., தலைவர் அஜய் குமார் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஆண்டு செப்டம்பரில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் முக அடையாளம் கண்டறியும் சோதனை, தேசிய மின் ஆளுமை உதவியுடன் நடத்தப்பட்டது. ஹரியானாவின் குருகிராமில் உள்ள குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில், இது சோதனை முறையில் நடந்தது.
இதன்படி, தேர்வெழுதும் நபரின் முகம், அவர் சமர்ப்பித்த படிவங்களில் ஒத்துப் போகிறதா என்பது, டிஜிட்டல் முறையில் சில வினாடிகளில் சரிபார்க்கப்படும். இது, தேர்வர்களை அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது. எனவே, யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், இந்த முக அடையாள சோதனை கட்டாயமாக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
