உண்மை கண்டறியும் குழுவா; அதெல்லாம் செல்லாது: அடித்து நொறுக்கியது ஐகோர்ட்
உண்மை கண்டறியும் குழுவா; அதெல்லாம் செல்லாது: அடித்து நொறுக்கியது ஐகோர்ட்
UPDATED : செப் 20, 2024 06:10 PM
ADDED : செப் 20, 2024 06:01 PM

மும்பை: 'உண்மை அறியும் குழு அமைக்க ஏதுவாக மத்திய அரசு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தம், சட்டவிரோதமானது'', என மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மத்திய அரசு கடந்த 2023ம் ஆண்டு தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதில், சமூக வலைதளங்களில் மத்திய அரசு மற்றும் அதன் துறைகள் குறித்து பரவும் பொய் செய்திகள் குறித்து ஆராய உண்மை கண்டறியும் குழு அமைக்க வழி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரஸ் இன்பர்மேஷன் பிரோ அமைப்பின் கீழ் உண்மை கண்டறியும் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு, சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாகும்போது, அவற்றை பொய் எனக்கருதினால், அதை குறிப்பிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த ஜனவரி மாதம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். ஒரு நீதிபதி சட்டதிருத்தம் செல்லும் எனவும், மற்றொரு நீதிபதி செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து, இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
விசாரித்த நீதிபதி இன்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: பொய் செய்திகளை கண்டறிய, உண்மை அறியும் குழுவை அமைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த சட்டத்திருத்தமானது, அரசியல் சாசனத்தின் பிரிவு 14, 19(1) (ஏ) மற்றும் 19(1)(ஜி) ஆகியவற்றுக்கு எதிரானதாக உள்ளது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இதன் மூலம் மத்திய அரசின் சட்டத்திருத்தம் செல்லாததாகிவிட்டது.
தமிழகத்திலும்
தமிழகத்திலும், அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மாநில அரசு உண்மை அறியும் குழுவை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.