துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசியல்: சந்திரபாபு நாயுடு காட்டம்!
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசியல்: சந்திரபாபு நாயுடு காட்டம்!
ADDED : ஆக 22, 2025 06:07 PM

புதுடில்லி: ''துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கான பெரும்பான்மை இருந்த போதிலும், ஏன் எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்துகின்றன? இது அவர்களின் அரசியல்,'' என்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டார். சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைத்து கட்சிகளிடமும் கேட்டு வருகின்றனர்.
அதே போல மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிசும் ஆதரவு திரட்டி வருகிறார். இதுதொடர்பாக அவர், சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் (பவார் பிரிவு) சரத்பவார் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
நான் உத்தவ் தாக்கரே, சரத் பவார் இருவரிடம் பேசினேன். மஹாராஷ்டிராவின் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
தமது முடிவை ஆலோசித்து தெரிவிக்க இருப்பதாக உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். சரத் பவாரோ, மறுப்பு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளருக்கு தான் ஆதரவு என்று கூறி இருக்கிறார்.
இவ்வாறு பட்னவிஸ் கூறி உள்ளார்.
லோக்சபாவில் சிவசேனாவுக்கு (உத்தவ் பிரிவு) 9 எம்பிக்கள் உள்ளனர். தேசியவாத காங்கிரசுக்கு(பவார் தரப்பு) 19 எம்பிக்கள் இருக்கின்றனர். ராஜ்யசபாவில் இரு கட்சிகளுக்கும் தலா 2 எம்பிக்கள் உள்ளனர்.
இதனிடையே பாஜ கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம், தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளரான சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
நாங்கள் பாஜ கூட்டணியில் இருக்கும் போது எதிர்க்கட்சியினர் அவர்களின் வேட்பாளருக்கு எப்படி எங்களிடம் ஆதரவு கேட்கலாம் (எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்தவர்). அவரை (சுதர்சன் ரெட்டி) ஆதரிக்க வேண்டும் என்று எப்படி அவர்கள் எதிர்பார்க்கலாம்?
தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கு மக்களுக்கானது. அது வேறு ஒரு விஷயம். நாங்கள் கூட்டணியில் இருக்கின்றோம். எங்கள் கட்சிக்கு என்று ஒரு கொள்கை, நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையை 50 ஆண்டுகளாக நாங்கள் மக்களிடம் கட்டமைத்து இருக்கிறோம்.
துணை ஜனாதிபதி வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்று கேட்டால், நான் சி.பி. ராதாகிருஷ்ணனைத் தான் சிறந்தவர் என்பேன். அவர் சிறந்த வேட்பாளர். அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொல்வேன். துணை ஜனாதிபதி பதவி என்பது கவுரவமான ஒன்று.
அவரின் வெற்றிக்கான பெரும்பான்மை இருந்த போதிலும், ஏன் எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்துகின்றன? இது தேவையா? அது அவர்களின் அரசியல். ஆனால் நாங்கள் இதில் எந்த அரசியலும் செய்யவில்லை. எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. நாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.