சென்னப்பட்டணாவில் தோல்வி? ஜமீர் மீது யோகேஸ்வர் பாய்ச்சல்!
சென்னப்பட்டணாவில் தோல்வி? ஜமீர் மீது யோகேஸ்வர் பாய்ச்சல்!
ADDED : நவ 14, 2024 11:49 PM

ராம்நகர்; இடைத்தேர்தல் முடிவு வெளியாக, இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், சென்னப்பட்டணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வர், விரக்தியுடன் பேசியுள்ளார்.
கர்நாடகாவின் ஷிகாவி, சென்னப்பட்டணா, சண்டூர் தொகுதிகளுக்கு, நேற்று முன்தினம் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. அனைத்து வேட்பாளர்களின் அரசியல் தலையெழுத்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக, இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் ஓய்வின்றி இரவு, பகலாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். தொண்டர்களுடன் ஆலோசனை, பொதுக்கூட்டம், ரோடு ஷோ என, பரபரப்பாக இருந்தனர்
'ரிலாக்ஸ்'
தேர்தல் முடிந்ததால், தற்போது ரிலாக்ஸ் மூடில் உள்ளனர். அந்தந்த தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும், எவ்வளவு ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என, கணக்கு போடுகின்றனர். மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது என்றாலும், அனைவரின் பார்வையும், 'ஹைவோல்டேஜ்' தொகுதியான சென்னப்பட்டணா மீது பதிந்துள்ளது.
ஓட்டு எண்ணிக்கை நடக்க, இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில், சென்னப்பட்டணா காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வர், தோல்வியை ஒப்பு கொண்டது போன்று பேசியது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா தொகுதியில், யார் வெற்றி பெற்றாலும், மிகவும் குறைந்த ஓட்டு வித்தியாசம் இருக்கும். பா.ஜ., - ம.ஜ.த.,வினரின் முயற்சி, சென்னப்பட்டணாவில் நன்றாகவே பலன் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் குமாரசாமியை, அமைச்சர் ஜமீர் அகமது கான், 'கருப்பர்' என விமர்சித்தது, எங்களின் தோல்விக்கு காரணமாகலாம்.
நன்றி
தேர்தலில் எனக்காக பணியாற்றிய காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., சுரேஷுக்கு நன்றி கூறுகிறேன்.
தன் பேரன் நிகில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என, முன்னாள் பிரதமர் தேவகவுடா போராடியுள்ளார். சென்னப்பட்டணாவில் சம பலத்துடன் போரட்டம் நடந்ததாக தோன்றுகிறது. சிலரின் பேச்சுகள் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஜமீர் அகமது கானின் பேச்சினால், எனக்கு ஓரளவு முஸ்லிம்களின் ஓட்டுகள் வந்திருக்கலாம்.
ஆனால் எனக்கு வர வேண்டிய ஒக்கலிகர் ஓட்டுகள் வரவில்லை என, நினைக்கிறேன்.
சென்னப்பட்டணாவில் நிகில் பிரசாரம் ஜோராக இருந்தது. தொகுதியில் அவரது சமுதாயத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவருக்காக வேலை செய்துள்ளனர். நான், சிவகுமார், சுரேஷும் கூட ஒக்கலிகர் தான். ஆனால் தொகுதி மக்கள், ம.ஜ.த.,வினருடன் ஒட்டிக்கொண்டு அமர்ந்துள்ளனர்.
கண்டனம்
நான் வெற்றி பெற்றால், காங்கிரசின் திட்டங்கள் வேலை செய்துள்ளது என, கருத வேண்டும்.
தோற்றால் கட்சி தாவியதால் மக்கள் என்னை புறக்கணித்தனர் என, நினைப்பேன். ஜமீர் அகமது கானின் பேச்சை, தனிப்பட்ட முறையில் நான் கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.