சி.ஆர்.பி.எப்., பெயரில் போலி செயலி வீரர்கள், ஊழியர்களுக்கு எச்சரிக்கை
சி.ஆர்.பி.எப்., பெயரில் போலி செயலி வீரர்கள், ஊழியர்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஆக 20, 2025 10:21 AM
புதுடில்லி: சி.ஆர்.பி.எப்., பெயரில் போலியான செயலி சமூக வலைதளங்களில் பயன்பாட்டில் உள்ளதாக எச்சரித்துள்ள அதன் தலைமையகம், அதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை செயல்பட்டு வருகிறது. துணை ராணுவ அமைப்பான இது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, நக்சல் எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு பணிகளில் சி.ஆர்.பி..எப்., வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கென, அரசால் பிரத்யேகமாக, 'சி.ஆர்.பி.எப்., - சம்பவ்' என்ற பெயரில், 'மொபைல் போன்' செயலி உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வீரர்களின் ஊதியம், விடுப்பு உள்ளிட்ட நிர்வாக விபரங்களை இந்த செயலி வாயிலாக அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், 'சம்பவ் அப்ளிகேஷன் ரைட்டர்' என்ற பெயரில் சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு என போலி செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக சி.ஆர்.பி.எப்., தொழில்நுட்ப பிரிவு எச்சரித்துள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரி கூறியதாவது:
'சம்பவ் அப்ளிகேஷன் ரைட்டர்' என்ற பெயரிலான போலி மொபைல் போன் செயலி, சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி எந்த பெயரிலும் செயலிகள் உருவாக்கப்படவில்லை.
இந்த செயலியில் பதிவு செய்தால் மட்டுமே, சி.ஆர்.பி.எப்., அமைப்புக்கான பிரத்யேக செயலிக்கு செல்ல முடியும் என தகவல் பரவி வருகிறது. அதில், உண்மையில்லை.
இந்த போலி செயலியில், வீரர்கள் குறித்த முழு விபரம் கோரப்படுகிறது. இதை நம்பி யாரும் தகவல்களை பகிர வேண்டாம். அங்கீகரிக்கப்படாத இதுபோன்ற செயலியில், தகவல்களை பகிர்வது, பாதுகாப்பு அபாயங்களுக்கு வழிவகுக்கும். ஆகையால், இந்த போலி செயலியை யாரும் பதிவிறக்கவோ, நிறுவவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம்.
இது தொடர்பான எச்சரிக்கையை வீரர்கள் அனைவருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரியபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.