ரூ.6.6 கோடி போலி மருந்துகள் கோல்கட்டா நிறுவனத்தில் பறிமுதல்
ரூ.6.6 கோடி போலி மருந்துகள் கோல்கட்டா நிறுவனத்தில் பறிமுதல்
ADDED : ஜன 01, 2025 01:11 AM
புதுடில்லி, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு அதிகாரிகள் நடத்திய அதிரடி வேட்டையில், 6.6 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள, 'கேர் அண்டு கியூர் பார் யூ' என்ற மருந்து மொத்த விற்பனை நிறுவனத்தில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு அதிகாரிகள் மற்றும் மருந்து கட்டுப்பாடு இயக்குனரக அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெருமளவிலான புற்று நோய் எதிர்ப்பு மாத்திரைகள் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை, 6.6 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டார். அவரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:
மொத்த விற்பனை மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அயர்லாந்து, துருக்கி, அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை இறக்குமதி செய்யப்பட்டதற்கான எந்த ஆவணமும் கிடைக்கவில்லை.
இவை போலி மாத்திரைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அந்த நிறுவனத்தில் இருந்து காலி மாத்திரை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.