இசை கச்சேரிக்கு போலி டிக்கெட் ஐந்து மாநிலங்களில் சோதனை
இசை கச்சேரிக்கு போலி டிக்கெட் ஐந்து மாநிலங்களில் சோதனை
ADDED : அக் 27, 2024 12:54 AM

புதுடில்லி: 'கோல்ட் பிளே' மற்றும் பிரபல பாடகர் தில்ஜித் தோசன்ஜின் இசை கச்சேரிகளுக்கு, போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, ஐந்து மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பிரபல 'ராக்' இசைக் குழுவான, 'கோல்ட் பிளே' குழுவினருக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இணையதளம்
இந்த இசைக் குழுவின் கச்சேரி, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், 2025 ஜன., 18 - 21 வரை என நான்கு நாட்கள் நடக்கிறது.
இதேபோல், டில்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், பஞ்சாபைச் சேர்ந்த பிரபல பாடகர் தில்ஜித் தோசன்ஜ் இசை கச்சேரிகளை நடத்துகிறார்.
டில்லியில் துவங்கிய அவரது இசை கச்சேரி, அசாமின் குவஹாத்தியில், டிச., 29ல் முடிவடைகிறது.
கோல்ட் பிளே மற்றும் பாடகர் தில்ஜித்தின் இசை கச்சேரிகளுக்கான டிக்கெட் விற்பனை, 'புக் மை ஷோ, சோமெட்டோ லைவ்' ஆகிய இணையதளங்களில் நடந்தது. சில நிமிடங்களிலேயே, இந்த இசை கச்சேரிகளுக்கான டிக்கெட் முழுதுமாக விற்றுத் தீர்ந்தது.
தேவை அதிகம் இருந்ததால், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு இசை கச்சேரிகளின் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, புக் மை ஷோ நிறுவனம் சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பாக, டில்லி, மஹாராஷ்டிராவின் மும்பை, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், சண்டிகர், கர்நாடகாவின் பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள 13 இடங்களில், அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
பறிமுதல்
அப்போது, மொபைல் போன்கள், மடிக்கணினிகள், சிம் கார்டுகள் போன்ற குற்றவியல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்தி, போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும், சட்டவிரோத டிக்கெட் விற்பனை; அதன் நெட்வொர்க்குகள், இந்த குற்றத்தின் வாயிலாக பெறப்பட்ட வருமானம் போன்றவற்றையும் அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்தனர்.