லோக்சபா தேர்தலில் போலி செய்திகள்; சமூக வலைதளங்கள் தீவிர கண்காணிப்பு
லோக்சபா தேர்தலில் போலி செய்திகள்; சமூக வலைதளங்கள் தீவிர கண்காணிப்பு
ADDED : பிப் 10, 2024 11:49 PM

பெங்களூரு : லோக்சபா தேர்தல் நெருங்குவதால், சமூக வலைதளங்களில் போலியான செய்திகளுக்கு கடிவாளம் போட, கர்நாடக அரசு ஆலோசிக்கிறது.
லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. இச்சூழ்நிலையில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வெளியாவது அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக, ஒர்ல்டு எக்னாமிக்ஸ் போரம் எச்சரித்துள்ளது.
பொதுவாக தேர்தல் நேரத்தில், வாட்ஸாப், முகநுால், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்கள், பொய்யான செய்திகள் பரப்ப பயன்படுத்தப்படுகின்றன.
அரசியல் விஷயங்களுக்கு தவறாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சில கட்சிகள் குறிப்பிட்ட சமுதாயங்களை குறி வைத்து, பொய்யான செய்திகள் பரப்புகின்றன. மக்களை தவறான பாதைக்கு ஈர்க்கின்றன.
இத்தகைய பொய்யான செய்திகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் வலுவான சட்டம் இல்லை என, சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். லோக்சபா தேர்தல் நேரத்தில், பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, ஐடி., - பிடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
போலி செய்திகள் பரப்புவதால், என்னென்ன அபாயங்கள் ஏற்படும் என்பது, பத்து ஆண்டுகளாக நமக்கு தெரிந்துள்ளது.
உச்சநீதிமன்றம் உட்பட பல்வேறு தரப்பிலும் சுட்டி காண்பித்துள்ளன. கர்நாடக அரசும், இவ்விஷயத்தை தீவிரமாக கருதுகிறது.
சமூக வலைதளங்களில் வெளியாகும் பொய்யான செய்திகளை கட்டுப்படுத்த, கர்நாடக இன்னோவேஷன் மற்றும் டெக்னாலஜி சொசைட்டி மூலமாக கண்காணிக்க, சிறப்பு குழுக்கள் அமைத்துள்ளது.
இந்த குழுவில் ஐ.பி.எஸ்., அதிகாரி, சட்ட வல்லுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 15 நாட்களில் குழுக்கள் செயல்பட துவங்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
கர்நாடகாவின் முன்னாள் ஐ.ஜி.பி., அஜய்குமார் சிங் கூறியதாவது:
பொய்யான செய்திகள், வதந்திகள் வெகு வேகமாக பரவும். இதற்கு படித்தவர்களே பலியாவது, வருந்தத்தக்க சங்கதி. சில நேரங்களில் மக்கள், தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள், அறிவை ஓரங்கட்டி பொய்யான விஷயங்களை நம்புகின்றனர். இவர்களை மதி மயக்குகின்றனர். இது சமுதாயத்துக்கு அபாயமானது.
பொய்யான செய்திகளை பரப்புவதே, சில சோம்பேறிகளின் நோக்கம். இதை எதிர்த்து நாம் போராட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.