ADDED : ஜன 22, 2024 03:24 AM
புதுடில்லி : போலி பாஸ்போர்ட் வாயிலாக இந்தியர்களை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பிய வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளுக்கு சொந்தமாக டில்லி, குஜராத்தில் உள்ள இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
போலி பாஸ்போர்ட் மற்றும் விசாவை பயன்படுத்தி, 60 லட்சம் முதல் 1.75 கோடி ரூபாய் வரை பெற்றுக்கொண்டு, பலரை கடந்த 2015 முதல் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பியதாக குஜராத் போலீசார் இரண்டு வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இவற்றில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் பாரத்பாய் படேல், சரண்ஜித் சிங் உள்ளிட்டோர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்தது.
இந்நிலையில், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்களை அனுப்பியபோது, அவர்கள் உறைபனியில் சிக்கி பலியாகினர். இந்த வழக்கில் படேல், 2022ம் ஆண்டு குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு இந்தியர்களை அனுப்பியது தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு சொந்தமான இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
குஜராத்தின் ஆமதாபாத், சூரத், மேஹ்சானா மற்றும் டில்லி உள்ளிட்ட 22 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது 1.5 கோடி மற்றும் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டன.
இவை தவிர பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் வடிவிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.