ADDED : அக் 11, 2024 07:02 AM

ஹுலிமாவு: 'உங்கள் கடை சுத்தமாக இல்லை என்று சுகாதார அதிகாரிகளிடம் கூறுவேன்' என, பேக்கரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்த, போலி பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ஹுலிமாவில் பேக்கரி நடத்துபவர் ரமேஷ். கடந்த 3ம் தேதி பேக்கரிக்கு, டிப் - டாப் உடை அணிந்து ஒருவர் வந்தார். கன்னட செய்தி சேனலில் பத்திரிகையாளராக இருப்பதாக கூறினார். பின், பேக்கில் இருந்து மைக்கை எடுத்து, இனிப்புகள் தயாரிக்கும் அறைக்கு சென்று, 'இந்த இடத்தை பாருங்கள். எப்படி சுத்தம் இல்லாமல் இருக்கிறது' என்று பேசினார். அதை அவருடன் வந்த, ஒருவர் வீடியோ எடுத்தார்.
பின், ரமேஷிடம் சென்று, 'உங்கள் கடை சுத்தமாக இல்லை.
இதுபற்றி சுகாதார அதிகாரிகளிடம் கூறுவேன். எங்கள் சேனலில் செய்தி ஒலிபரப்புவதுடன், யு - டியூப்பிலும் வீடியோ அப்லோடு செய்வேன். இப்படி செய்யாமல் இருக்க 50,000 ரூபாய் தர வேண்டும்' என்று மிரட்டி உள்ளார்.
பயந்து போன ரமேஷ் 10,000 ரூபாய் கொடுத்தார். மீதி தொகையை கேட்டு, ரமேஷை தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
இது குறித்து பேக்கரி உரிமையாளர் சங்கத்தில், ரமேஷ் புகார் செய்தார். மேலும் சில பேக்கரிகளின் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரிந்தது. இதனால் ஹுலிமாவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
பத்திரிகையாளர் என்று கூறிய நபரை, நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் அவர் போலி பத்திரிகையாளர் என்பதும், கன்னட செய்தி சேனலின் பெயரில், போலி அடையாள அட்டை தயாரித்ததும் தெரிந்தது; அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் முகமது சபி.
வேறு யாரிடம் இதுபோன்று மிரட்டி பணம் பறித்தார் என்றும், விசாரணை நடக்கிறது.
