தென் மாநில நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு: குடிநீருக்கு சிக்கல் ஏற்படும்?
தென் மாநில நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு: குடிநீருக்கு சிக்கல் ஏற்படும்?
UPDATED : ஏப் 27, 2024 11:52 AM
ADDED : ஏப் 27, 2024 11:01 AM

புதுடில்லி: தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம் என எச்சரித்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடும் வெயில் காரணமாக தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள நீர்தேக்கங்களில் நீர் மட்டம் கடுமையாக சரிந்து வருகிறது.
தென் மாநிலங்களில் 42 நீர்தேக்கங்களை கண்காணித்து வருகிறோம். அங்கு 53.334 பில்லியன் கியூபிக் மீட்டர்(பிசிஎம்) அளவு தண்ணீர் தேக்க முடியும். ஆனால், தற்போது அங்கு 8.865 பிசிஎம் அளவு(17 சதவீதம்) தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 29 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருந்தது. இது அம்மாநிலங்களில் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை ஏற்படுத்துவதுடன், குடிநீர், விவசாயம், மின்சார உற்பத்தி செய்வதில் கடுமையான சவால்களை ஏற்படுத்தும்.
இதற்கு மாறாக அசாம்,ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகளை விட அதிகரித்து உள்ளது. இந்த மாநிலங்களில் 23 நீர்த்தேக்கங்களில் 20.430 பிசிஎம் தண்ணீர் தேக்க முடியும். தற்போது 7.889 பிசிஎம் தண்ணீர் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய நீர் ஆணையம் கூறியுள்ளது.

