UPDATED : டிச 12, 2024 08:12 AM
ADDED : டிச 12, 2024 12:08 AM

புதுடில்லி : கணவரையும், அவருடைய குடும்பத்தாரையும் பழிவாங்க, வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களை பல பெண்கள் துஷ்பிரயோகம் செய்வதாக சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய பொய் புகார்களை முளையிலேயே கிள்ளி எறிய நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. மனைவியின் பொய் புகார்களால் மன உளைச்சலுக்கு ஆளான பெங்களூரு இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பாக விவாதிக்கப்படும் நேரத்தில், சுப்ரீம் கோர்ட் விடுத்துள்ள எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 'விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், என் மீதும், என் குடும்பத்தார் மீதும் என் மனைவி குடும்ப வன்முறை புகார்களை தெரிவித்துள்ளார்.
'பழிவாங்கும் நோக்கோடு பொய் புகார்களை கொடுத்துள்ளார். இது எங்களுக்கு அவமானத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது' என கூறியிருந்தார்.
மனைவியின் புகார்களை ரத்து செய்ய ஹைதராபாத் ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனதால், சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் நாகரத்தினா, கோட்டீஸ்வர் சிங் விசாரித்தனர். அவருடைய மனுவை ஏற்று, மனைவியின் புகார்களை தள்ளுபடி செய்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்றும் நோக்கத்துடன், இந்திய தண்டனை சட்டத்தின் 498ஏ பிரிவு கொண்டு வரப்பட்டது.
ஆனால், அதை பயன்படுத்தி கணவர் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் பெண்கள் புகார் கொடுப்பது அதிகரித்துள்ளது.
கொடுமைக்கு ஆளாகும்போது பெண்கள் புகார் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்றே கூறுகிறோம். திருமண உறவில் பிரச்னை ஏற்படும்போது, கணவர் மீதும், அவரது குடும்பத்தார் மீதும் பொய்யான புகார்களை கூறுவது தடுக்கப்பட வேண்டும்.
குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் என்பது பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு கேடயம். அதையே ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. ஆனால், அந்த போக்கு நாடு முழுவதும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
கணவர் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் உள்ள கோப தாபங்களுக்கு வடிகாலாக பல பெண்கள் இந்த சட்டப் பிரிவை பயன்படுத்துகின்றனர். இதனால், சட்டத்தின் நோக்கமே் நீர்த்து போகிறது.
ஆதாரம் இல்லாத, சாட்சியங்கள் இல்லாத பொத்தாம் பொதுவான அல்லது சாதாரணமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், நீதிபதிகள் ஆரம்ப நிலையிலேயே அவற்றை கண்டறிந்து நீக்க வேண்டும்.
முளையிலேயே கிள்ளி எறிவது நேர்மையான, விரைவான நீதி பரிபாலனத்துக்கு உதவும். சட்ட நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி எவரையும் தண்டிக்க முற்படுவது குற்றமாகும். இந்த நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால் இந்த சட்டத்தின் பிரிவுகளை மறுஆய்வு செய்யலாம். இதனால்தான், கணவர் மீதான புகார்களின் நம்பகத்தன்மையை ஆராயாமல் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என, பல வழக்குகளில் இந்த நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.