'சோனியா, ராகுல், சித்துவுக்கு குடும்பத்தினர் தான் முக்கியம்'
'சோனியா, ராகுல், சித்துவுக்கு குடும்பத்தினர் தான் முக்கியம்'
ADDED : செப் 29, 2024 07:59 AM

தார்வாட் : ''சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா அஞ்சுகிறார். சோனியா, ராகுல், சித்தராமையா ஆகியோருக்கு அவர்களின் குடும்பம் தான் முக்கியம்,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பல்வேறு முறைகேடுகளில் சிக்கிய சில காங்கிரஸ் மேலிட தலைவர்கள், ஜாமினில் வெளியே உள்ளனர்.
சித்தராமையா, 62 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 மனைகள் வாங்கியதாக அவரே தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் நீதிமன்றம் கூறிய பின்னரும், சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டியது தானே. சி.பி.ஐ., விசாரணைக்கு சித்தராமையா அஞ்சுகிறார். சோனியா, ராகுல், சித்தராமையாவுக்கு தங்களின் குடும்பம் தான் முக்கியம்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா விஷயத்தில், சித்தராமையா என்ன கூறினார் என்பது அனைவருக்கும் தெரியும். எடியூரப்பா மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதித்த போது, 'கவர்னருக்கு உண்டான சட்டத்தின்படி நடந்து கொண்டார்' என தெரிவித்தார். கவர்னரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.
கோத்ரா வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை. கோத்ரா சம்பவத்துக்கும், மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அஹிந்தா பெயரில் ஆட்சிக்கு வந்தவர் சித்தராமையா. கையும் களவுமாக பிடிபட்டவுடன், கவர்னரை குற்றம்சாட்டுகிறார்.
இவ்வாறு அவர்கூறினார்.