குடும்ப ஆட்சி நடக்கும் மாநிலங்கள் சீரழிந்துள்ளன: பிரதமர் மோடி
குடும்ப ஆட்சி நடக்கும் மாநிலங்கள் சீரழிந்துள்ளன: பிரதமர் மோடி
ADDED : மார் 06, 2024 12:51 AM

ஹைதராபாத், தெலுங்கானாவில், 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பணி முடிவடைந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
''ஜம்மு - காஷ்மீர் முதல் தமிழகம் வரையில், குடும்ப ஆட்சி நடக்கும் மாநிலங்கள் சீரழிந்து கிடக்கின்றன,'' என, பிரதமர் விமர்சித்தார்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ஹைதராபாதில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள சங்காரெட்டி மாவட்டத்தில், விமான போக்குவரத்து, சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவடைந்த திட்டங்களை பிரதமர் நேற்று துவக்கி வைத்தார்.
வளர்ச்சி திட்டங்கள்
அப்போது அவர் பேசியதாவது:
மாநிலங்களின் வளர்ச்சியில் தான் நாட்டின் வளர்ச்சி அடங்கியுள்ளது என்பதை உறுதியாக நம்புகிறேன். வளர்ந்த பாரதத்தை எதிர்நோக்கி 140 கோடி இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.
வளர்ந்த இந்தியாவுக்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அவசியமானது. எனவே தான், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பட்ஜெட்டில், 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், தெலுங்கானா பெரிதும் பலன் அடைய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.
வளர்ச்சிப் பாதையில் தெலுங்கானா புதிய உயரங்களை தொட, கடந்த 10 ஆண்டு ஆட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தெலுங்கானாவின் அடிலாபாதில் 56,000 கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களை நேற்று முன்தினம் துவக்கி வைத்தேன். தற்போது சங்காரெட்டியில் 7,200 கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்கிறேன்.
என் குடும்பமாக நான் கருதும் என் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களை நிறைவேற்றி வருவது காங்கிரஸ் கட்சி நண்பர்களை ஆத்திரமடைய செய்கிறது.
நாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளுக்கும் தடையாக உள்ள குடும்ப அரசியலை நான் விமர்சிப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு பதில் அளிக்க முடியாமல், 'மோடிக்கு குடும்பம் இல்லை' என, விமர்சிக்கின்றனர்.
காங்கிரஸ், தங்கள் கட்சியில் உள்ள 50 வயதுக்கு குறைவானவர்களை வளரவிட்டதில்லை. யாருக்காவது பதவி தர வேண்டுமானால், 75 - 80 வயதில் இருப்பவர்களுக்கே பதவி தருகின்றனர்.
ஆதிக்கம்
கட்சிக்குள் 50 வயதுக்கு குறைவானவர்கள் பதவிக்கு வந்து ஆதிக்கம் செலுத்தினால் குடும்பத்துக்கு என்ன ஆகுமோ என அஞ்சுகின்றனர்.
ஜம்மு - காஷ்மீர் முதல் தமிழகம் வரை குடும்ப ஆட்சி நடக்கும் மாநிலங்கள் சீரழிந்து கிடக்கின்றன. அங்கு குடும்பங்கள் மட்டும் தான் வளர்கின்றனவே தவிர, மாநிலங்கள் வளரவில்லை. இந்த நிலை தொடர வேண்டுமா?
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஹைதராபாதில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் இரவு தங்கிய பிரதமர் மோடி, நேற்று காலை அங்குள்ள உஜ்ஜயினி மகாகாளி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின், சங்காரெட்டி மாவட்டத்திற்கு சென்றார்.

