ADDED : ஜன 02, 2024 01:28 AM

புதுடில்லி, பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாதா கோல்டி பிராரை, பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரும், பிரபல தாதாவுமான லக்பீர் சிங் லண்டாவை, பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில், மூளையாகச் செயல்பட்ட தாதா கோல்டி பிராரை, மத்திய அரசு நேற்று பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பஞ்சாபின் ஸ்ரீ முக்தர் சாஹிப்பை சேர்ந்த கோல்டி பிரார், வடஅமெரிக்க நாடான கனடாவின் பிராம்ப்டனில் வசித்து வருகிறார். இவர் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்புடன் இணைந்து, நம் நாட்டு தலைவர்களை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், ஆயுத கடத்தல், எல்லை தாண்டி தாக்குதல் போன்ற குற்றச் செயல்களில் கோல்டி பிரார் ஈடுபட்டு, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார்.
இதனால், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், கோல்டி பிரார் பயங்கரவாதியாக அறிவிக்கப்படுகிறார். அவருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது.
மேலும், 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பின் வாயிலாக, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

