ADDED : ஜன 10, 2025 12:41 AM

திருச்சூர்:பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன், 80, உடல்நலக் குறைவால் கேரளாவில் நேற்று காலமானார்.
கேரளாவின் திருச்சூரில் உள்ள இரிஞ்சாலாகூடாவைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
சிறு வயதில் மிருதங்க இசையில் தேர்ச்சி பெற்ற ஜெயச்சந்திரன், பள்ளி, கல்லுாரிகளிலும், தேவாலயங்களிலும் பாடல்கள் பாடி வந்தார்.
கடந்த 1967ல், எம்.எஸ்.பாபுராஜ் இசையில் வெளியான உத்யோகஸ்தா மலையாள படத்தில், 'அநுராக கானம் போலே' என்ற பாடலை பாடி திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
மலையாளத்தில் பல பாடல்களை பாடிய அவரை, மணிப்பயல் படம் வாயிலாக தமிழில் அறிமுகப்படுத்தினார், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இதைத் தொடர்ந்து மூன்று முடிச்சு, கடல் மீன்கள், வைதேகி காத்திருந்தாள், பூவே உனக்காக உட்பட பல்வேறு படங்களில் ஜெயச்சந்திரன் பாடியுள்ளார்.
இவர், சிறந்த திரைப்பட பின்னணி பாடகருக்கான தேசிய விருதும் பெற்றவர்.
இவர் பாடிய, 'தாலாட்டுதே வானம், ராசாத்தி உன்னை, பூவ எடுத்து ஒரு மாலை, கொடியிலே மல்லிகைப்பூ' உள்ளிட்ட பாடல்கள், இசை ரசிகர்கள் மத்தியில் இன்றும் எதிரொலிக்கின்றன.

