அமைச்சர் முனியப்பா வீடு முற்றுகை தற்கொலைக்கு முயன்ற விவசாயி
அமைச்சர் முனியப்பா வீடு முற்றுகை தற்கொலைக்கு முயன்ற விவசாயி
ADDED : ஏப் 11, 2025 06:45 AM
தேவனஹள்ளி: தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உணவு அமைச்சர் முனியப்பா வீட்டை முற்றுகையிட வேன்களில் புறப்பட்ட போது, போலீசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் ஆவேசம் அடைந்தனர். ஒரு விவசாயி விஷம் கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி தாலுகா, சென்னராயப்பட்டணா மற்றும் அதை சுற்றியுள்ள 13 கிராமங்களில் 1,777 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த, கர்நாடக அரசின் தொழில் துறை கடந்த 2021ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 13 கிராம விவசாயிகள் கடந்த 2021ல் இருந்து தொடர் போராட்டம் நடத்துகின்றனர். போராட்ட இடத்திற்கு சென்று முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் பேச்சு நடத்தியும் எந்த பயனும் இல்லை. விவசாயிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்கின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு உணவு அமைச்சரும், பெங்களூரு ரூரல் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முனியப்பா, விவசாயிகளிடம் பேச்சு நடத்திய போது தொழில் துறை வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார்.
ஆனாலும், நிலத்தை கையகப்படுத்த தொழில் துறையின் கர்நாடக தொழில்பகுதி மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதனால் கோபம் அடைந்த விவசாயிகள், பெங்களூரு சென்று முனியப்பாவை சந்தித்து பேச முடிவு செய்தனர்.
நேற்று காலை, சென்னராயப்பட்டணா கிராமத்தில் இருந்து, இரண்டு வேன்களில் புறப்பட்டனர். ஆனால் வேன்களை தடுத்து நிறுத்திய போலீசார் பெங்களூரு செல்ல கூடாது என்று கூறினர். கோபம் அடைந்த விவசாயிகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோபம் அடைந்த விவசாயிகள் போராட்ட இடத்தில் தயாரித்த உணவுடன் விஷத்தை கலந்து சாப்பிட முயன்றனர். போலீசார் தடுத்தனர். ஆனால் வெங்கடேஷ் என்ற விவசாயி விஷம் கலந்த உணவை சாப்பிட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அசம்பாவித சம்பவத்தை தடுக்கும் வகையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

