துங்கபத்ரா அணை தண்ணீர் வராததால் விவசாயிகள் அதிருப்தி
துங்கபத்ரா அணை தண்ணீர் வராததால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : செப் 21, 2024 06:55 AM

கொப்பால்: கடைமடைப் பகுதியான ராய்ச்சூரின் மான்வி, சிரவாரா ஆகிய தாலுகாக்களில் உள்ள கிராமங்களுக்கு, துங்கபத்ரா அணை தண்ணீர் இன்னும் வந்து சேரவில்லை. இதனால் அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
கொப்பால் மாவட்டம், முனிராபாத்தில் துங்கபத்ரா அணை உள்ளது. இந்த அணையின் தண்ணீர் கொப்பால், ராய்ச்சூர், விஜயநகரா, பல்லாரி ஆகிய நான்கு மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால், துங்கபத்ரா அணை கடந்த ஜூலையில் நிரம்பியது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இரவு, அணையின் 19வது மதகின் ஷட்டர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு நாட்கள் கழித்து வேறு தற்காலிக ஷட்டர் பொருத்தப்பட்டது.
அதற்குள் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 35 டி.எம்.சி., தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். ஆனாலும் அதன் பின் பெய்த கனமழையால், அணை மீண்டும் நிரம்பியது.
அணையில் இருந்து கால்வாய்கள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் கடைமடை பகுதியான ராய்ச்சூரின் மான்வி, சிரவாரா ஆகிய தாலுகாக்களில் உள்ள கிராமங்களுக்கு, கால்வாய் தண்ணீர் இன்னும் வந்து சேரவில்லை.
இதனால் கால்வாய்கள் வறண்டு போய் உள்ளன. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் தண்ணீர் வராததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், தங்கள் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என அதிகாரிகள் மீது, விவசாயிகள் கோபத்தில் உள்ளனர்.