பஞ்சாபில் பஸ் இயங்காததால் பாதிப்பு : உ.பி.,யிலும் விவசாயிகள் போராட்டம்
பஞ்சாபில் பஸ் இயங்காததால் பாதிப்பு : உ.பி.,யிலும் விவசாயிகள் போராட்டம்
UPDATED : பிப் 16, 2024 11:52 PM
ADDED : பிப் 16, 2024 11:51 PM

அமிர்தசரஸ், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் சார்பில், நேற்று நடந்த, 'பாரத் பந்த்' எனப்படும் முழு அடைப்பு போராட்டத்தால், பஞ்சாபில் பஸ்கள் இயங்காததால் பொது மக்கள் அவதியடைந்தனர்.
இதே போல், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்திலும் போராட்டங்கள் நடந்தன.
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி முற்றுகை போராட்டத்தை, பஞ்சாப், ஹரியானா, உ.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
டில்லியின் எல்லைகள் அடைக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டுள்ளதால், எல்லைகளுக்கு அருகே விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' என்ற விவசாய சங்கம், நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு பஞ்சாப், உ.பி., - ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பஞ்சாபில் நேற்று பஸ்கள் இயங்கவில்லை. தனியார் பஸ்களும் இயங்காததால் பொது மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
பஞ்சாபின் பல்வேறு இடங்களில், சந்தைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. பதான்கோட், டர்ன் தரன், பதிண்டா, ஜலந்தர் ஆகிய இடங்களில், தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயிகள் போராடினர்.
ஹரியானாவில் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில், விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முடங்கியது. உ.பி.,யின் சில பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. முசாபர் நகரில் நடந்த போராட்டத்தில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் பங்கேற்றார்.