விவசாயிகள் மறியல் போராட்டம் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
விவசாயிகள் மறியல் போராட்டம் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
ADDED : டிச 19, 2024 02:01 AM

சண்டிகர்: மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, பஞ்சாபில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் நேற்று மூன்று மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று முறை டில்லிக்கு செல்ல முயன்ற அவர்களை ஹரியானா பாதுகாப்பு படையினர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையே, விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி, பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மசுதார் மோர்ச்சா ஆகிய அமைப்புகள், மத்திய அரசின் கவனம் ஈர்ப்பதற்காக ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, நேற்று மதியம் 12:00 மணிக்கு துவங்கி 3:00 மணி வரை, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதனால், பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமடைந்தன. பயணியர் பாதிக்கப்பட்டனர்.