பங்கார்பேட்டை தாலுகா ஆபீஸ் முன் விவசாயிகள் நாளை போராட்டம்
பங்கார்பேட்டை தாலுகா ஆபீஸ் முன் விவசாயிகள் நாளை போராட்டம்
ADDED : பிப் 14, 2024 04:53 AM
பங்கார்பேட்டை, : பங்கார்பேட்டை கத்ரி நத்தம் கிராமத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையான இடுகாட்டுக்கு நிலம் ஒதுக்காததை கண்டித்து, தாலுகா அலுவலகம் முன், விவசாயிகள் நாளை போராட்டம் நடத்துகின்றனர்.
கோலார் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நாராயண கவுடா பேட்டி :
பங்கார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கத்ரி நத்தம் கிராமத்தினர் இறந்தால், இறுதி சடங்கு செய்ய இடுகாடு அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால், பங்கார் பேட்டை தாலுகா நிர்வாகம் கண்டுக் கொள்ளவில்லை.
இக்கிராமத்தின் சாலையை இருபது ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. தார் ரோடு போடும் படி வலியுறுத்தியும் செய்யவில்லை.
வயல்களில் யானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. இங்கு உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. பீதியில் பயந்து வாழ வேண்டிய நிலை உள்ளது. மருத்துவ வசதி உட்பட அடிப்படை வசதிகளும் இல்லை.
மயிலே மயிலே என்றால் இறகு போடாது; பெற்ற தாயே ஆனாலும் குழந்தை அழுதால் தான் பால் கொடுக்கிற வழக்கம் உள்ளது. எனவே தான் போராட்டம் நடத்த உள்ளோம்.
கத்ரிநத்தம் கிராமம் மட்டுமின்றி அதன் சுற்றுப் புறங்களில் உள்ள கிராமத்தினரும் இணைந்து டிராக்டர்களில் ஊர்வலமாக வந்து தாலுகா அலுவலகம் முன், 15 ம் தேதி போராட்டம் நடத்துகின்றோம்.
இதிலும் தீர்வு கிடைக்காவிட்டால், கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா நடத்தப் படும்.
இவ்வாறு அவர்கூறினார்.

