ADDED : மார் 11, 2024 03:35 AM

புதுடில்லி : பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாய அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதனால், அம்மாநிலங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
கண்டனம்
குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதிய பலன்கள், விவசாய கடன்களை ரத்து செய்வது, அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு அதிக இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை விவசாய அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோர்ச்சா உட்பட 200க்கும் அதிகமான விவசாய அமைப்புகள் டில்லியை நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.
எனினும், பஞ்சாப் - ஹரியானா எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சியினர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
அப்போது, கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியின்படி விவசாய அமைப்பினர் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, நேற்று பல்வேறு இடங்களில் விவசாய அமைப்பினர் பகுதிநேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலியுறுத்தல்
குறிப்பாக பஞ்சாபில் உள்ள பெரோஷாபூர், அமிர்தசரஸ், ரூப்நகர், குருதாஸ்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று நண்பகல் 12:00மணி முதல் மாலை 4:00 மணி வரை தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பஞ்சாபில் பெரும்பாலான பகுதி களில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளிலும் விவசாய அமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட்டதால், இங்கும் ரயில் சேவை பாதிப்புக்கு உள்ளாகின. இதனால் ஏராளமான பயணியர் அவதிக்குள்ளாகினர்.
