விவசாயிகள் போராட்டம்? இன்று மூன்றாம் கட்ட சமரச பேச்சு!
விவசாயிகள் போராட்டம்? இன்று மூன்றாம் கட்ட சமரச பேச்சு!
ADDED : பிப் 15, 2024 02:02 AM

சண்டிகர், டில்லியை நோக்கி பேரணி நடத்த முயன்றுள்ள விவசாய சங்கத்தினர், பஞ்சாப் -- ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கலைந்து போகச் செய்ய, இரண்டாவது நாளாக நேற்றும் கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, டில்லியில் இன்று நடக்கும் மூன்றாம் கட்ட பேச்சில் முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போராட்டம்
விவசாய உற்பத்தி பொருட்களுக்கு, எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
'டில்லி சலோ' எனப்படும் டில்லியை நோக்கி பேரணி என்ற பெயரில், பல விவசாய சங்கத்தினர் தங்கள் பயணத்தை நேற்று முன்தினம் துவக்கினர்.
போராட்டத்தை கைவிடுவதற்கு மத்திய அரசு நடத்திய பேச்சில் முடிவு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான வாகனங்களில் விவசாய சங்கத்தினர் பேரணி துவங்கியது.
பஞ்சாப் - ஹரியானா எல்லையான ஷம்புவில், பேரணியை தடுத்து நிறுத்தும் வகையில், பல அடுக்கு தடுப்புகளை ஹரியானா அரசு அமைத்துள்ளது. கான்கிரீட் தடுப்புகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இந்தப் பகுதியை அடைந்த விவசாய சங்கத்தினர், அந்த தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றனர்.
இதையடுத்து, கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன், விவசாயிகள் மோதலில் ஈடுபட்டனர். இதில் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக, ஷம்பு பகுதியில் விவசாயிகள் அதிகளவில் குவியத் துவங்கினர். அவர்கள் வந்த டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் வரிசை கட்டியுள்ளன.
ஷம்பு பகுதியைத் தவிர, பஞ்சாபில் இருந்து ஹரியானா வரும் மற்ற எல்லைப் பகுதிகளிலும் இது போன்று தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் டாடா சிங்வாலா - கனோரி எல்லையிலும், விவசாயிகளின் வாகனங்கள் அதிகளவில் குவிந்துள்ளன.
மூன்றாம் சுற்று பேச்சு
ஷம்பு எல்லையில் நேற்றும் விவசாயிகள் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றனர். இதையடுத்து, கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதனால், இரண்டாவது நாளாக அந்தப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, விவசாய சங்க தலைவர்கள் - மத்திய அரசு இடையே ஏற்கனவே நடந்த இரண்டு சுற்று பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இதை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியுஷ் கோயல், நித்யானந்த் ராய் உள்ளிட்டோர், விவசாய சங்க தலைவர்களை இன்று மாலை 5:00 மணிக்கு சந்தித்து மூன்றாம் சுற்று பேச்சு நடத்த உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பெரிய மனதுடையவர். அவர் எங்களுடைய கோரிக்கையை ஏற்று, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும். நாங்கள் அரசுடன் மோத வரவில்லை. எங்கள் கோரிக்கையை முன்வைக்க வந்துள்ளோம். தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தினால், பேச்சில் பங்கேற்க தயாராக உள்ளோம்.
சர்வண் சிங் பண்டேர்
விவசாய சங்கத் தலைவர்
மத்திய அரசு பேச்சுக்கு அழைத்தது, நாங்கள் அதை மறுத்துவிட்டோம் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்க மாட்டோம். உரிய முறையில் அழைத்தால், அதற்கான இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தினால், பேச்சில் பங்கேற்க தயாராக உள்ளோம்.
ஜக்ஜித் சிங் தல்லேவால்
விவசாய சங்க தலைவர்

