ADDED : ஜூலை 17, 2025 11:10 PM
குருேஷத்ரா:ஹரியானாவில், போதிய அளவில் உரம் கிடைக்காததை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள், விவசாய துறை அதிகாரியை சிறைப்பிடித்து வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவின் குருேஷத்ரா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களுக்கு போதிய அளவில் உரம் கிடைக்கவில்லை என கடந்த சில நாட்களாக புகார் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று இங்குள்ள விவசாய அலுவலகத்துக்கு சென்ற விவசாயிகள், அங்கிருந்த அதிகாரி பிரதீப் குமாரிடம் இது குறித்து முறையிட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரதீப் குமார் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், பிரதீப் குமாரை அலுவலகத்துக்கு வெளியில் இழுத்து வந்து, சாலையில் நிறுத்தினர். ஹிசார் - சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசாரும், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளை சமாதானம் செய்தனர். இதையடுத்து, நீண்ட நேரத்துக்கு பின், பிரதீப் குமாரை விவசாயிகள் விடுவித்தனர்.