ADDED : அக் 19, 2024 11:01 PM

கெங்கேரி: குடிபோதையில் தொந்தரவு செய்த மகனை, கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, நாகதேவனஹள்ளியின் சித்ரகூடா பள்ளி பின்பகுதியில் வசிப்பவர் லிங்கப்பா, 68. இவரது மகன் ராஜேஷ், 36. இவர் வாடகை கார் ஓட்டுனராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான ராஜேஷ், தினமும் குடித்து வந்து குடும்பத்தினருக்கு தொல்லை கொடுப்பார். இவரது இம்சை தாங்காமல், குழந்தையுடன் அவரது மனைவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
தந்தை லிங்கப்பா, தாய் புட்டம்மாவுடன் ராஜேஷ் வசித்து வந்தார். தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, பெற்றோருடன் தகராறு செய்தார்.
நேற்று முன் தினம் நள்ளிரவில், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜேஷ், தந்தையுடன் சண்டை போட்டு, ஜன்னல் கண்ணாடியை உடைத்தார்.
கேட்டை காலால் உதைத்து, அட்டூழியம் செய்தார்; தந்தையை தாக்கினார். கோபமடைந்த தந்தை லிங்கப்பா, ராஜேஷை அடித்து, காலால் உதைத்தார். அவரது கைகளை கயிற்றால் கட்டினார். மரக்கட்டையால் மண்டையில் ஓங்கி அடித்தார். கயிற்றால் அவரது கழுத்தை நெரித்தார்.
கணவரும், மகனும் அடித்துக் கொள்வதை கண்டு, கலக்கமடைந்த புட்டம்மா, அதிகாலையில் தன் உறவினர் லோகேஷுக்கு போன் செய்து, உதவிக்கு வரும்படி அழைத்தார். அவர் அங்கு வந்து பார்த்தபோது, ராஜேஷ் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார்.
லோகேஷ் உடனடியாக ஹொய்சாளா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, ராஜேஷ் இறந்துவிட்டது தெரிந்தது. அவரது உடலை மீட்டனர். லிங்கப்பாவை கைது செய்தனர்.
கெங்கேரி போலீசார் விசாரிக்கின்றனர்.