பூட்டிய வீடு, உள்ளே 5 சடலங்கள்; டில்லியை அதிர வைத்த சம்பவம்
பூட்டிய வீடு, உள்ளே 5 சடலங்கள்; டில்லியை அதிர வைத்த சம்பவம்
ADDED : செப் 28, 2024 12:06 PM

புதுடில்லி; தலைநகர் டில்லியில் பூட்டிய வீட்டில் 5 சடலங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கூறப்படுவதாவது; வசந்த் குன்ஞ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார் வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருப்பதை கண்டு, தீயணைப்புத்துறைக்கு தகவல் தந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், கதவின் தாழ்ப்பாளை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்த போது 5 சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். சடலங்கள் அருகில் தூக்க மாத்திரைகள் சிதறி கிடப்பதை கண்டனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில் போலீசார் கூறியிருப்பதாவது; உயிரிழந்து கிடப்பது ஹீராலால் சர்மா(46) என்பதும், மற்றவர்கள் அவரது மகள்களான நீத்து(26), நிக்கி(24), நீரு(23),நிதி(20) என்பது தெரியவந்தது. மகள்களில் 2 பேர் மாற்றுத்திறனாளிகள், ஹீராலால் மனைவி கடந்தாண்டு மரணம் அடைந்த நாள் முதல் 5 பேரும் சோகத்தில் இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். மனைவி மரணம், மகள்கள் சிகிச்சை என மன உளைச்சலில் இருந்த ஹீராலால், மகள்கள் 4 பேரையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம்.
செப்.24ம் தேதி வீட்டுக்குள் சென்ற அவர்கள் 5 பேரும் அதன் பின்னர் வெளியே வரவில்லை. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழு விவரங்கள் வெளியாகும்.
இவ்வாறு போலீசார் கூறி உள்ளனர்.