அடடே...! மகா.,வில் மெகா அரசியல்! தந்தையை எதிர்த்து போட்டியிடும் மகள்!
அடடே...! மகா.,வில் மெகா அரசியல்! தந்தையை எதிர்த்து போட்டியிடும் மகள்!
ADDED : செப் 13, 2024 12:31 PM

மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியில் சேர்ந்துள்ள பாக்யஸ்ரீ, தமது தந்தையை எதிர்த்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது அம்மாநில அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.
வரும் நவம்பர் மாதம் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. மற்ற அரசியல் கட்சிகளை விட இத்தேர்தலில் சுறுசுறுப்பாக களம் இறங்கி இருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவனர் சரத்பவார். மற்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை கண்டறிந்து, அவர்களை தமது கட்சியில் சேர்த்து அதிரடி காட்டி வருகிறார்.
அங்கே சென்று, இங்கே சென்று தற்போது அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் உள்ள அமைச்சர் தர்மராவ் பாபா என்பவரின் மகள் பாக்யஸ்ரீ, சரத்பவாரின் தேசியவாத காங்கிரசில் இணைந்துள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால் அமைச்சரான தந்தை போட்டியிட உள்ள அஹெரி தொகுதியில் பாக்யஸ்ரீ போட்டியிடுகிறார்.
நடப்பதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் அமைச்சரும், தந்தையுமான தர்மராவ் பாபா, மகளை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் கூறுகையில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசில் சேரும் மகளை ஆற்றில் தூக்கி போடுங்கள் என்று கூறி உள்ளார்.
தந்தை திட்டுவதை மிகவும் சாதுர்யமாக எதிர்கொள்ளும் மகள் பாக்யஸ்ரீ, அதை அவரின் ஆசிர்வாத வார்த்தைகளாக எடுத்துக் கொள்வதாக கூறி இருக்கிறார். இப்படி கட்சி மாறி, காட்சிகளும் மாறி வருவது, அஜித்பவாருக்கு பெரும் நெருக்கடியையும், தொகுதி பங்கீட்டில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் உள்ளதாக அம்மாநில அரசை கூர்ந்து கவனிப்பவர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.