பெங்களூரு வடக்கில் பிரியா கிருஷ்ணா போட்டியிட தந்தை கிருஷ்ணப்பா எதிர்ப்பு
பெங்களூரு வடக்கில் பிரியா கிருஷ்ணா போட்டியிட தந்தை கிருஷ்ணப்பா எதிர்ப்பு
ADDED : மார் 12, 2024 11:24 PM

பெங்களூரு வடக்கு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக எம்.எல்.ஏ., பிரியா கிருஷ்ணாவை களம் இறக்க, கர்நாடகா காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு அவரது தந்தையான எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.
பெங்களூரில் உள்ள பெங்களூரு மத்திய, பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளும் பா.ஜ., வசம் உள்ளது.
இந்த மூன்று தொகுதிகளையும், பா.ஜ.,விடம் இருந்து தட்டிப்பறிக்கும் வகையில், திறமையான வேட்பாளரை களம் இறக்க, காங்கிரஸ் நினைத்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரு வடக்கு தொகுதி வேட்பாளராக, கோவிந்த்ராஜ்நகர் தொகுதி எம்.எல்.ஏ., பிரியா கிருஷ்ணாவை நிறுத்த, கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர். இதனால் பெங்களூரு வடக்கு தொகுதிக்கு, அவரது பெயரை பரிந்துரை செய்து உள்ளனர்.
ஆனால், இதற்கு எம்.எல்.ஏ., பிரியாகிருஷ்ணாவின் தந்தையும், விஜயநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணப்பா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
“முன்னாள் அமைச்சர் சோமண்ணாவின் சொந்த தொகுதியான, கோவிந்த்ராஜ்நகரில் அவரை தோற்கடித்து உள்ளோம். எதற்காக, பிரியா கிருஷ்ணா லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும். ஒருவேளை அவர் போட்டியிட்டால், இடைத்தேர்தலில் அந்த தொகுதி கையை விட்டுப் போனால், என்ன செய்வது?” என, அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- நமது நிருபர் -

