ADDED : ஜூலை 16, 2025 11:42 AM
ஷாஜகான்பூர்: உத்தர பிரதேசத்தில் போதைக்கு அடிமையான மகனை, துப்பாக்கியால் தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டம் தில்ஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்கார் கங்வார், 67.
தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்ட் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ஹர்ஷவர்தன் கங்வார், 32. கஞ்சா உள்ளிட்ட போதை பொருளுக்கு அடிமையானார்.
இந்நிலையில் போதையில் வந்து தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுஉள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் போதையில் வீட்டிற்கு வந்த ஹர்ஷவர்தன், சுத்தியலை காட்டி குடும்ப உறுப்பினர்களை கொன்றுவிடுவதாக மிரட்டி தகராறில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வந்த அவரது தந்தை ஓம்கார், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து மகனை மிரட்டியுள்ளார்.
ஆனாலும் ஹர்ஷவர்தன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த ஓம்கார், மகனை துப்பாக்கியால் சுட்டார்.
இதில், மார்பில் காயம் அடைந்த ஹர்ஷவர்தன் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.