ADDED : செப் 30, 2025 03:38 AM

லக்னோ : உத்தர பிரதேசத்தில் காதலனுடன் மகள் மொபைல் போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
உத் தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டம் அம்பிதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷல்பன். இவரது மகள் முஸ்கன், 17.
இவர் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் முஸ்கன் பழகி வந்தார். இருவரும் காதலித்த நிலையில், இது குறித்து முஸ்கனின் தந்தைக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, மகள் முஸ்கனை கண்டித்த அவரது தந்தை ஷல்பன், இளைஞருடன் பழகுவதை நிறுத்தும்படி கூறினார். ஆனாலும், இருவருக்குமான காதல் தொடர்ந்தது. இருவரும் மொபைல் போனில் தொடர்ந்து பேசினர்.
நேற்று முன்தினம் முஸ்கன் தன் காதலனுடன் மீண்டும் மொபைல் போனில் பேசினார். இதை கண்டு ஆத்திரமடைந்த ஷல்பன், மகள் முஸ்கனை வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு, மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இந்த கொலைக்கு, ஷல்பனின் 15 வயது இளைய மகன் உதவியாக இருந்துள்ளார். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஷல்பனையும், அவரது மகனையும் கைது செய்தனர்.
குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகை யில் மகள் காதலித்ததால் சுட்டுக் கொன்றதாக ஷல்பன் போலீசாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.